சென்னையில் 5–ந்தேதி மவுன ஊர்வலம்: ஜெயலலிதா நினைவிடத்தில் இதய அஞ்சலி செலுத்துவோம் தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் அழைப்பு
சென்னையில் 5–ந்தேதி மவுன ஊர்வலம், ஜெயலலிதா நினைவிடத்தில் இதய அஞ்சலி செலுத்துவோம் தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.;
சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 2–ம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5–ந்தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மவுன ஊர்வலம் நடைபெறவுள்ளது. நாம் அனைவரும் பெரும் திரளாய் கூடி வங்கக் கடலோரம் துயில்கொள்ளும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சங்கமித்து இதய அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றிடுவோம்.
ஜெயலலிதா தமிழகத்துக்காக நிலைநாட்டிய அத்தனை சிறப்பையும், அவ்வழியே நின்று நாமும் நிலைநாட்டிடுவோம். அவர் முன்னெடுத்த அத்தனை லட்சிய போராட்டத்தையும் நாம் தொடர்ந்திடுவோம். சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழகத்தை தலைநிமிரச் செய்திடுவோம். டிசம்பர் 5–ந்தேதி சென்னையில் சங்கமிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.