டெல்லியில் நடந்த விவசாயிகள் பேரணி வேளாண்மையில் புதிய கொள்கையை வகுக்க திருப்புமுனையாக அமையும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை
விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, விளை பொருட்களின் விலை நிர்ணயம், கொள்முதல், பொது வினியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, விளை பொருட்களின் விலை நிர்ணயம், கொள்முதல், பொது வினியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் நடந்த ‘கிசான் முக்தி மார்ச்’ என்ற 2 நாள் பேரணி நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். இது அவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியது. போராட்டம்தான் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதைத்தான் அவர்கள் பிரதானமாக நினைக்கின்றனர். மற்றொரு கடனைப் பெற்றாவது தங்களது விவசாய தொழிலுக்கு திரும்ப வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக உள்ளது. இரண்டாவது அவர்கள் முன்னிருத்துவது, குறைந்தபட்ச ஆதார விலை குறித்த எனது அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பதைத்தான். ஏனென்றால், அது விவசாயத்தின் மூலம் கூடுதல் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.
தற்போதுள்ள விவசாய முறைகளின்படி லாபம் கிடைக்கவில்லை என்பதுதான், அவர்களை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை முன்னிருத்தும் வேளாண்மை தற்போது அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. 2007-ம் ஆண்டில் விவசாயிகளுக்கான தேசிய கொள்கை தொடர்பாக கடந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் போனது தூரதிருஷ்டவசமானது.
மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு வேளாண்மைதான் வாழ்வாதாரமாக உள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் பெண்களும் இளைஞர்களும்தான். தேர்தல் அரசியலுக்காக கடன் தள்ளுபடிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இது வருத்தமளிக்கிறது. ஆனால் விவசாயியின் அடிப்படை பிரச்சினை தீர வேண்டுமானால், விலை நிர்ணயம், கொள்முதல், பொது வினியோகம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்.
விவசாயிகளுக்கு கூடுதலாக, பருவநிலை மாற்றத்தினால் வரும் பிரச்சினைகளும் தற்போது சேர்ந்துள்ளன. பருவநிலை மாற்றத்தினால் வெப்பநிலை உயர்வு, குளிர்காலத்தில் சீரற்ற மாறுபாடு மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை வேளாண்மைக்கு அவசியமான உகந்த சூழ்நிலையை கெடுத்துவிட்டன.
எந்தெந்த சூழ்நிலைகள், பகுதிகளில் குடும்பமாக விவசாயம் செய்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வறண்ட மண்டலங்கள், உலர் நிலங்கள், பாசன பகுதிகள், நிலத்தடி நீர்ப் பகுதிகள், மலைப்பகுதி ஆகிய இடங்களில் செய்யும் விவசாயங்கள் சமநிலையாக கருதப்பட வேண்டும். அந்தந்த இடங்களில் விவசாயிகளுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அவற்றை வழங்க வேண்டும்.
சமுதாயத்தில் ஒரு பிரிவினருக்கான பிரச்சினைகள் மீது மட்டும் தொடர்ந்து மிகுந்த கவனம் செலுத்தப்படுவதாகவும், போராடாவிட்டால் விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.
விவசாயிகளின் பிரச்சினை பற்றி பேசுவதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். இது சரியான கோரிக்கைதான்.
மற்றவர்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயிகள், பொருளாதார காரணங்களுக்காக தங்களின் உயிரை மாய்த்துக்கொள்வது வருத்தமளிக்கிறது. தற்போது நடந்துள்ள ‘கிசான் முக்தி மார்ச்’ பேரணி, வேளாண்மையில் புதிய கொள்கையை வகுக்க ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.
வேளாண்மைத் துறையை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்ததோடு நின்றுவிடாமல், அதை செயல்பாட்டிலும் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.