வடகிழக்கு பருவமழை தொடங்கியது வெள்ள சேதங்களை தடுக்க தமிழக அரசு முன்ஏற்பாடு

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அப்போது பெண்கள் குடை பிடித்தபடி சென்ற காட்சி. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இயல்பை விட இந்த ஆண்டு அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2018-11-02 00:15 GMT
சென்னை,

தென்மேற்கு பருவமழை ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் வட கிழக்கு பருவமழை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை இன்று(நேற்று) முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகள், தென் தமிழகம், தெற்கு கேரளா, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் தொடங்கி இருக்கிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளா வின் இதர பகுதிகள், ராயலசீமா மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகளிலும் தொடங்கும்.

தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை முதல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை நிலவுகிறது. மேலும் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சியானது தென் தமிழகம் பகுதியில் நிலவுகிறது.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழலில் 11 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. அடுத்து வரும் 2 நாட்களை பொறுத்தவரையில் (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளிவிட்டு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவ மழை காலங்களில் தமிழகம் இயல்பான அளவான 44 செ.மீ. மழைப்பொழிவை பெறும். இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் இயல்பைவிட அதிகமாக பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.

பருவமழை குறித்து சென்னை எழிலகத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொற்றுநோய் தடுப்பு, மீட்பு, நிவாரண பணிகள் என 3 கட்ட பணிகளை வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள், கலெக்டர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மிதமான முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. கடலோர பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பெய்த சராசரி மழை அளவு 180.8 மில்லி மீட்டர். தூத்துக்குடி, கோவை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட கூடுதல் மழையும், நீலகிரி, திருப்பூர், நாகை, அரியலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பான மழையும், புதுக்கோட்டை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைவான மழையும் பெய்துள்ளது.

நேற்று 21 மாவட்டங்களில் மழை பதிவாகியது. அதன் சராசரி மழை அளவு 7.4 மில்லி மீட்டர். சென்னை மாவட்டத்தில் அதிகளவாக 38.31 மில்லி மீட்டரும், குறைந்த அளவாக விழுப்புரம் மாவட்டத்தில் 0.15 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கடந்தாண்டை விட சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, வீராணம், புழல் ஏரிகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க சென்னைக்கு 1070 என்ற இலவச உதவி எண்ணும், மற்ற மாவட்டங்களுக்கு 1077 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூவம், அடையாறு ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னைக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நீண்ட கால பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தூர்வாரும் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் நேரடியாக கண்காணித்து வருகிறார். வட கிழக்கு பருவமழையால் கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் இனி ஏற்படாது.

கடந்த காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்படும் இடங்களாக 800-க்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தன. தற்போது, அவை 205 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் துறை செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் உடனிருந்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

புழலில் 11 செ.மீ., கேளம்பாக்கத்தில் 10 செ.மீ., பெரிய நாயக்கன்பாளையம், பெருந்துறை, கடலூரில் தலா 9 செ.மீ., மாதவரம், அவினாசியில் தலா 7 செ.மீ., பேரையூர், எண்ணூர், தரமணி, செங்குன்றத்தில் தலா 6 செ.மீ., வேதாரண்யம், சத்யபாமா பல்கலைக்கழகம், சிவகாசி, மாமல்லபுரத்தில் தலா 5 செ.மீ., அருப்புக்கோட்டை, சோழவரம், அண்ணா பல்கலைக்கழகம், காட்டுமன்னார் கோவில், நுங்கம்பாக்கத்தில் தலா 4 செ.மீ. உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்