தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகருடன் திடீர் சந்திப்பு 20 நிமிடம் ஆலோசனை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ப.தனபாலை திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.;

Update: 2018-11-01 22:54 GMT
சென்னை,

அ.தி.மு.க.வைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைப்போல ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய மேலும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டி.டி.வி. தினகரனுக்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்து வரும் இந்த 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு அ.தி.மு.க. கட்சி தலைமை நோட்டீசு அனுப்பியது. ஆனால் அதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களிடமும் உரிய விளக்கம் கேட்குமாறு அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில் “கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் விரைவில் நோட்டீசு அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறைக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பகல் 1 மணி அளவில் திடீரென்று சென்றார். அங்கு சபாநாயகர் ப.தனபாலை சந்தித்து சுமார் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்-அமைச்சர் தன்னுடைய அறைக்கு சென்றார்.

இந்த சந்திப்பின் போது, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்புவது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல் பரவியது. மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியின் தீர்ப்பு வெளியானபின் முதல் முறையாக சபாநாயகருடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தியது, தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் ப.தனபாலுக்கு தீபாவளி வாழ்த்து சொல்வதற்காகவே, அவரது அறைக்கு சென்றார்’ என தலைமை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போல 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்புவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சட்டசபை செயலக அதிகாரிகளும் கூறினர்.

மேலும் செய்திகள்