சென்னையில் சுகாதாரமற்ற இடங்களாக கண்டறியப்பட்ட குடியிருப்பின் உரிமையாளர்களுக்கு ரூ.22½ லட்சம் அபராதம்

“சென்னையில் சுகாதாரமற்ற இடங்களாக கண்டறியப்பட்ட குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு ரூ.22½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது” என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Update: 2018-11-01 22:01 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த்தடுப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

இதில் நகராட்சி நிர்வாகத்துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குனர் ககர்லா உஷா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் மற்றும் நகராட்சி, பேரூராட்சி துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்களுக்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்தவும், கொசுப்புழுக்களின் உற்பத்தியை தடுக்கவும், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதார துறை சார்பில் 3 ஆயிரத்து 314 மலேரியா ஒழிப்பு தொழிலாளர்களை கொண்டு நோய்த்தடுப்பு பணிகளும், 2 ஆயிரத்து 35 பணியாளர்களை கொண்டு ஒவ்வொரு வீடுகளிலும் கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் காலிமனைகளில் காணப்படும் தேவையற்ற பொருட்கள் மற்றும் குப்பைகளை உரிமையாளர்களே அகற்ற மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மாநகராட்சி சார்பில், கூடுதலாக 40 சிறு வாகனங்களை கொண்டு காலிமனைகளில் காணப்படும் தேவையற்ற பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய்த்தடுப்பு ஆய்வுப்பணிகளின் போது, சுகாதாரமற்ற இடங்களாக கண்டறியப்பட்ட குடியிருப்பின் உரிமையாளர்களுக்கு ரூ.22½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் நடந்த தூய்மை பணிகளின்போது, சுகாதாரமற்ற இடங்கள் கண்டறியப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சி பகுதிகளில் ரூ.1.07 லட்சமும், பேரூராட்சிகளில் ரூ.16 ஆயிரத்து 400-ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்