மகாபுஷ்கர விழாவில் தாமிரபரணியில் 22¾ லட்சம் பேர் புனித நீராடினர்

மகாபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் 22¾ லட்சம் பேர் புனிதநீராடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-10-25 22:15 GMT
சென்னை,

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர விழா கடந்த 11-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 13 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. மொத்தம் 60 படித்துறைகளில் மகாபுஷ்கர புனிதநீராடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசென்றனர்.

அதிகபட்சமாக 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 6 லட்சத்து 38 ஆயிரத்து 740 பேரும், மற்ற நாட்களில் சராசரியாக ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேரும் புனிதநீராடினர். விழா நடந்த நாட்களில் மொத்தம் 22 லட்சத்து 88 ஆயிரத்து 166 பேர் தாமிரபரணியில் புனிதநீராடி உள்ளனர்.

16¾ சவரன் நகைகள் மீட்பு

மகாபுஷ்கர விழா பாதுகாப்பு பணியில் 6,828 போலீசார் இரவு பகலாக ஈடுபட்டனர். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. பக்தர்கள் தவறவிட்ட 16¾ சவரன் நகைகள், ரூ.29,930, 4 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆற்றில் நீராடும்போது தண்ணீரில் மூழ்க இருந்த 6 பேரை பேரிடர் மீட்பு பயிற்சி பெற்றவர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்டனர். போலீசாரின் மெச்சத்தக்க பாதுகாப்பு பணியை பெரும்பாலான பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி உள்ளனர்.

டி.ஜி.பி. பாராட்டு

மகாபுஷ்கர விழா எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம்கொடுக்காமல் பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகள், போலீசார், இதர துறை பணியாளர்களுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்