எம்.ஜி.ஆர்.–ஜெயலலிதா சிலைகளுக்கு 17–ந் தேதி ஓ.பன்னீர்செல்வம்–எடப்பாடி பழனிசாமி மாலை அணிவிக்கின்றனர்
எம்.ஜி.ஆர்.–ஜெயலலிதா சிலைகளுக்கு 17–ந் தேதி ஓ.பன்னீர்செல்வம்–எடப்பாடி பழனிசாமி மாலை அணிவிக்கின்றனர்.
சென்னை,
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 17–ந் தேதி அன்று 47–வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், ராயப்பேட்டை கட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளவாறு, மரணமடைந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியும், விபத்துக்குள்ளாகி காயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.