சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அணுக்கூறு புற்றுநோய் உயர் சிகிச்சை பிரிவு

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அணுக்கூறு புற்றுநோய் உயர் சிகிச்சை பிரிவு தமிழக அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-04 22:15 GMT
சென்னை, 

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 4 படுக்கைகள் வசதி கொண்ட அணுக்கூறு புற்றுநோய் உயர் சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்து, சிறந்த செவிலியர்களுக்கு விருதுகள், பதக்கங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சைகளும் ஒரு இடத்தில் அமைந்துள்ளன. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அணுக்கூறு புற்றுநோய் உயர் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தைராய்டு, நியூரோஎண்டோகிரைன், புரோஸ்டேட், நரம்பு மூல செல் மற்றும் பியோ குரோமோ சைட்டோமோ போன்ற புற்றுநோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும்.

இதற்கான கதிரியக்கத்தன்மை கொண்ட மருந்துகளை உடலில் செலுத்தி புற்றுநோயை குணப்படுத்த முடியும். இதற்கான வசதிகள் தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணு சக்தி கட்டுப்பாடு ஆணையம் மற்ற மாநில அரசு மருத்துவமனைகளில் ஒன்று அல்லது இரண்டு படுக்கை வசதி கொண்ட பிரிவு அமைப்பதற்கே அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் மட்டுமே 4 படுக்கை வசதி கொண்ட பிரிவு அமைப்பதற்கு முதன் முறையாக அனுமதி அளித்துள்ளது.

மும்பையில் உள்ள இந்திய அணு சக்தி கட்டுப்பாடு ஆணைய அனுமதியுடன் சர்வதேச தரத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் இந்த அணுக்கூறு உயர் சிகிச்சை பிரிவு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களால் சுற்றுப்புறம் பாதிப்படையாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நோயாளிகளுக்கு வடிவமைக்கப்பட்ட உடை மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்படும். தைராய்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு கதிரியக்கத்தன்மை கொண்ட மருந்தினை நோயாளி உட்கொண்டு நடமாடும் கதிரியக்க மூலமாக மாறுவார். நோயாளியிடமிருந்து கதிரியக்க வெளியிடுதல் அளவு குறைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார். 6 மாதத்திற்கு ஒரு முறை புறநோயாளி பிரிவில் நோயாளி தொடர் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இந்த பிரிவில் ரூ.6 லட்சம் மதிப்பில் நோயாளிக்கு தேவைப்படும் கதிரியக்க மருந்தின் அளவை கணக்கிடும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை விமான நிலைய ஆணையம், ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 27.3.2018 அன்று அதிநவீன மருத்துவ கருவிகள் (நேரியல் முடுக்கி, பிரேக்கிதெரபி, சி.டி.ஸ்கேன், சிமுலேட்டர்) ரூ.18.50 கோடி மதிப்பில் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவைக்கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் உமாநாத், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயணபாபு, கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ஆனந்தகுமார், புற்றுநோய் கதிர்வீச்சு துறைத் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம், அணுக்கூறு மருந்தியல் துறை தலைவர் டாக்டர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்