அழகிரியால் எந்த பிரச்சினையும் இல்லை; திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம்- திருநாவுக்கரசர்
அழகிரியால் தி.மு.கவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ;திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Thirunavukkarasar
சென்னை
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மேலிட பார்வையாளரான சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் கட்சியின் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இரண்டாவது நாளான இன்றைய கூட்டத்தில், பல்வேறு அணி சார்ந்த தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பினரை வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான செல்வம் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயமடைந்ததால், கூட்டத்தில், பதற்றமான சூழல் நிலவியது.
கூட்டம் முடிந்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோபியா மீதான புகாரை திரும்பப்பெற்று அவர் விடுதலையாக தமிழிசை உதவ வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்
திமுக தலைவர் ஸ்டாலின் கையில் கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது, அழகிரியால் எந்த பிரச்சினையும் இல்லை.தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம், திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம் .
நாடாளுமன்றத்தில் ரபேல் ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை .
மத்திய அரசின் ரபேல் ஊழல் தொடர்பாக வரும் 10-ம் தேதியில் இருந்து 32 மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிப்போம் என கூறினார்.