“டி.டி.வி.தினகரன் அணி காணாமல் போய்விடும்” ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் அணி காணாமல் போய்விடும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-
பூலித்தேவன் பிறந்தநாள்
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பூலித்தேவனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் மாளிகையை சுற்றுலா மையமாக மேம்படுத்த தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். அதன்மூலம் பூலித்தேவன் மாளிகை, சுற்றுலா மையமாக தரம் உயர்த்தப்பட்டு அவரது வாழ்க்கை வரலாறு, சுதந்திர போராட்டத்தில் அவர் எடுத்து வைத்த அரும்பணிகள் காட்சிப்பொருளாக வைக்கப்படும்.
தாமிரபரணி புஷ்கர விழா தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பொதுவாக ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, அதனை முறைப்படுத்தி, சுத்திகரித்து மறுசுழற்சி செய்யப்படும். அதேபோல் தாமிரபரணி ஆற்றிலும் மாசு கலக்காமல் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க. வெற்றிபெறும்
டி.டி.வி.தினகரன் பகலில் அன்னார்ந்து வானத்தை பார்த்து பகல் கனவு காண்கிறார். அவ்வாறு பகல் கனவு கண்டு பிதற்றி வருகிறார். அவர் இதுவரை உருப்படியாக ஒரு வார்த்தைகூட பேசியது கிடையாது. திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இந்த தேர்தலுக்கு பிறகு தினகரன் அணி காணாமல் போய்விடும். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தல் கள கூட்டணி ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.