குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம் ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மீண்டும் கர்ப்பம் ஆனதால் ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2018-09-01 20:58 GMT
சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் தனம். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனக்கு திருமணமாகி 2-வது குழந்தை பிறந்ததும், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சான்றிதழும் வழங்கி உள்ளது.

இந்தநிலையில், உடலில் சில மாற்றம் தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தேன். அப்போது நான், கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரசு சலுகை இழப்பு

அதிர்ச்சி அடைந்த நான், ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருந்ததை மருத்துவர்களிடம் தெரிவித்தேன். இதன்பின்பு, மீண்டும் பரிசோதனை செய்து கர்ப்பத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால், 2 பெண் குழந்தைகளுக்கான அரசின் சலுகைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் இழப்பீடு

தவறான முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் தான் மூன்றாவதாக கர்ப்பமாக நேரிட்டதால் எனக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி உறைவிட மருத்துவ அதிகாரி ஆகியோர் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்