சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே கிடந்த வெடிமருந்து பையால் பரபரப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அருகே கிடந்த வெடிமருந்து பையை மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர்.

Update: 2018-08-31 22:35 GMT
சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை நிலையம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலை அம்மா முழு உடல் பரிசோதனை மையம் அருகே உள்ள நடைமேடையில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அங்குள்ள பொதுமக்கள், அந்த பையில் வெடிகுண்டு போன்ற பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இந்த மர்ம பை குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பூக்கடை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாதுகாப்பு கருதி மர்ம பை இருந்த இடத்தை சுற்றிலும் போலீசார் தடுப்பு அமைத்தனர்.

வெடிமருந்து

பின்னர் மோப்ப நாய் உதவியுடன் அந்த மர்ம பையை சோதனை செய்தனர். சோதனையில் முடிவில் அதில் வெடி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த மர்ம பையை போலீசார் கைப்பற்றி எடுத்துச்சென்றனர். இந்த மர்ம பை குறித்து போலீசார் கூறுகையில், ‘இந்த பையில் இருந்தது திருவிழா சமயங்களில் வேடிக்கைக்காக உபயோகப் படுத்தப்படும் வெடிமருந்து ஆகும். இதை இங்கு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்’, என்றார்.

இந்த சம்பவம் குறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை அருகே மர்ம வெடி மருந்து பை இருந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்