கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் பாலியல் புகார்களை விசாரிக்க அமைத்த விசாகா குழுவை எதிர்த்து வழக்கு

காவல் துறையில் பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவை மாற்றியமைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2018-08-31 21:45 GMT
சென்னை,

காவல்துறையில் பெண் காவலர்கள், பெண் அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமாஅகர்வால் தலைமையில், கூடுதல் டி.ஜி.பி. அருணாச்சலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு சரஸ்வதி அடங்கிய விசாகா குழுவை அமைத்து கடந்த 17-ந் தேதி தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இந்த குழு சட்டப்படி அமைக்கப்படவில்லை என்றும், எனவே டி.ஜி.பி.யின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

பிரதிநிதி இல்லை

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

விசாகா குழுவில் சட்டப்படி ஒரு தலைமை அதிகாரியும், குறைந்தது மூன்று உறுப்பினர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்கள் அமைப்பு அல்லது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதியாக இருக்க வேண்டும்.

ஆனால், டி.ஜி.பி., அமைத்துள்ள இந்த குழுவில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்த குழு உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே விசாகா குழுவை மாற்றி அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்.

உத்தரவிட வேண்டும்

அதுமட்டுமல்லாமல், தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் சட்டவிதிகளை பின்பற்றி, விசாகா குழுக்களை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை தாங்கள் விசாரிக்கவில்லை என்றும், வேறு அமர்வுக்கு (டிவிசன் பெஞ்ச்) மாற்றுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்