சென்னை பெரியார் திடலில் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதிகள் பங்கேற்பு
சென்னை பெரியார் திடலில் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதிகள் பங்கேற்றனர்.
சென்னை,
திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் சென்னை பெரியார் திடலில் கருணாநிதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கருணாநிதியின் உருவப்படத்தை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.மோகன் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘கருணாநிதியுடன் மிக நெருங்கி பழகி உள்ளேன். நீதித்துறைக்காக கருணாநிதி ஆற்றிய சாதனைகளை சொல்ல பல நாட்கள் வேண்டும். கருணாநிதியால் தான் என்னைப் போன்றவர்கள் நீதிபதி ஆக முடிந்தது என்பதை மறுக்க முடியாது. கருணாநிதி வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன், நீதிபதியாக பணியாற்றினேன் என்பதை எண்ணி பெருமைபடுகிறேன்’ என்றார்.
கருணாநிதி புகழ் அழியாது
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசாமி பேசும்போது, ‘தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியவர் கருணாநிதி. தமிழகத்தை மேம்படுத்தியதில் கருணாநிதியின் பங்களிப்பு அதிகம். தமிழ் இருக்கும் வரை கருணாநிதியின் புகழ் அழியாது’ என்றார்.
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசும்போது, ‘கருணாநிதி பதவிகளை தேடிப்போனது இல்லை. அவரை தேடி பதவிகள் வந்தன. என்னைப் போன்றவர்கள் அவரால் தான் உயர்ந்தநிலையை அடைந்தோம். கருணாநிதியின் புகழ் ஒரு போதும் அழியாது’ என்றார்.
மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்
ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.சாமித்துரை, ஏ.கே.ராஜன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்ததும் மேடைக்கு சென்று கருணாநிதியின் புகழ் குறித்து பேசிய ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தார். முடிவில், திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வீரசேகரன் நன்றி கூறினார்.