தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட திருமண மண்டபங்கள்

தூத்துக்குடியில், கலவரத்தால் திருமண மண்டபங்களும் பாதிக்கப்பட்டன.

Update: 2018-05-25 21:13 GMT
தூத்துக்குடி, 

நகரங்களில் முகூர்த்த நாட்களுக்கு திருமண மண்டபங்கள் கிடைப்பது பெரும்பாடாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே திருமண மண்டபங்களுக்கு முன்பதிவு செய்யவேண்டி இருக்கிறது. திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துவிட்டாலே திருமண வீட்டாருக்கு பாதி வேலை முடிந்த மாதிரிதான்.

கலவரம், துப்பாக்கி சூடு சம்பவங்களின் காரணமாக பதற்றம் நீடித்து வந்த தூத்துக்குடியில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் தூத்துக்குடி நகரில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் நேற்று திருமணங்கள் நடைபெற்றன.

என்றாலும் திருமண மண்டபங்களில் கூட்டம் அதிகமாக இல்லை. பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. கலவரம் ஓய்ந்துவிட்டாலும் இன்னும் முழுஅளவில் இயல்பு நிலை திரும்பாததால் வெளியில் செல்வதில் மக்களிடம் சிறிது தயக்கம் உள்ளது.

திருமண வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் போதிய அளவில் வராததால் பல திருமண மண்டபங்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பாதுகாப்பு கருதி சில திருமண மண்டபங்களில், கதவுகள் மூடப்பட்ட நிலையில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன.

இதுபற்றி ஒருவர் கூறுகையில், “எங்கள் குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு 2 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ்கள் கொடுத்து இருந்தோம். குறைந்தபட்சம் 1,500 பேராவது வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சில நூறு பேர்தான் வந்து உள்ளனர். இதனால் ஏராளமான சாப்பாடு வீணாகிவிட்டது” என்றார்.

இதேநிலைதான் பெரும்பாலான திருமண மண்டபங்களில் காணப்பட்டது.

மேலும் செய்திகள்