பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் நேரில் சந்திக்காதது ஏன்? பிரேமலதா கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? என பிரேமலதா கேள்வி எழுப்பினார்.
ஆலந்தூர்,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? என பிரேமலதா கேள்வி எழுப்பினார்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் முன் விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, நிருபர்களிடம் கூறியதாவது:-
வரலாற்றில் மட்டுமே படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, தற்போது தூத்துக்குடியில் நடைபெற்று உள்ளது. இது தமிழக மக்களுக்கு அவமான சின்னமாகும். ஒரு மானை சுட்டால் கூட தண்டனை கொடுக்கக்கூடிய நாட்டில், மனிதர்களை சுட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?. முடக்கப்பட வேண்டியது இணையதளங்களை அல்ல. இந்த ஆட்சியைத்தான். கலெக்்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை மாற்றுவதற்கு பதிலாக இந்த அரசை தான் மாற்ற வேண்டும்.
பேரணி வருவதற்கு முன்பே தடுப்புகள் ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கையும், மக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து இருக்கலாம். 4 நாட்களுக்கு முன்பே 144 தடை உத்தரவு போட்டு இருக்கலாமே?. மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே திட்டமிட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அடக்குமுறையை ஏவி கொலை செய்து உள்ளது.
பலியானவர்களுக்கு ரூ.1 கோடி தந்தாலும் போன உயிர் திரும்ப கிடைக்குமா?. பணம் கொடுத்து மக்களின் வாயை அடைக்க அரசு நினைக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பாக இல்லாமல், ஸ்டெர்லைட் ஆலைக்கு பக்கபலமாக அரசு இருக்கிறது.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்?. தைரியமான மக்கள் ஆட்சி நடத்துபவர்களாக இருந்தால் மக்களை போய் சந்திக்க வேண்டும். இதன் பின்னால் பணம் விளையாடி இருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆலையை மூட அறிவிப்பு வரவில்லை. மின்சார இணைப்பு துண்டிப்பு என்பது கண்துடைப்பு நாடகம். கவர்னரை சந்திக்க விஜயகாந்த் நேரம் கேட்டுள்ளார். அப்போது தமிழகத்தில் நடக்கும் அவலங்கள் அவரிடம் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.