ஸ்டெர்லைட் போராட்டத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு- ஜெயக்குமார்
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #SterliteProtest
சென்னை
சென்னையில் நிருபர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே அரசின் நிலைப்பாடு. மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக அரசு ஆதரவு அளிக்காது. தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கும். வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது ஜனநாயக அமைப்பில் வன்முறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கல்வீசித் தாக்குதல் நடத்தியது தவறு . தூத்துக்குடி போராட்ட சம்பவத்தை விசாரிக்க ஆணையம் அமைப்பது பற்றி அரசு முடிவு எடுக்கும்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட போராட்டம் ஏற்புடையதல்ல, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் குறித்த முழுமையான தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.