2 வாலிபர்கள் கழுத்தை அறுத்து கொலை முகமூடி அணிந்து வந்த கும்பல் வெறிச்செயல்
ராமநாதபுரம் அருகே முகமூடி அணிந்து வந்த கும்பல் 2 வாலிபர்களை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த செல்வம் தனது குழந்தைக்கு நேற்று முன்தினம் காதணி விழா நடத்தினார். விழா முடிந்து இரவு வீட்டின் முன்பாக போடப்பட்டிருந்த பந்தலில் விஜய் (வயது 22), பூமிநாதன் (33), மற்றொரு விஜய் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்து வந்த 15 பேர், தூங்கிக்கொண்டிருந்த விஜய், பூமிநாதன், மற்றொரு விஜய் ஆகியோரை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் விஜய், பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மற்றொரு விஜய்யை உறவினர்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடந்தது. அவர்களின் உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், “போலீசார் சட்டப்படியாக நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்பார்கள். இதற்காக 40 பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்” என்றார்.
ஆனாலும் குற்றவாளிகளை பிடித்தால் தான் உடல்களை பெற்றுக்கொள்வோம் என்று கிராம மக்கள் உறுதியாக கூறிவிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது.