பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்ற பெயரில் கொள்ளை டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்ற பெயரில் கொள்ளை நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

Update: 2018-05-20 21:45 GMT
சென்னை,

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக பெட்ரோல்-டீசல் விலைகளை தினமும் 10 பைசா முதல் 20 பைசா என்ற அளவில் உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இப்போது கடந்த 19 நாட்களில் செய்யப்படாத விலை உயர்வை ஈடு கட்டுவதற்காக தினசரி விலை உயர்வை இருமடங்காக உயர்த்தயுள்ளன.

இது கத்தியைக் காட்டாமல் எரிபொருள் நிரப்பும் குழாய்களின் முனையைக் காட்டி நடத்தப்படும் கொள்ளை ஆகும்.

இந்தியாவில் கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இது பெரு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் ஆகும்.

எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில் நடத்தப்படும் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக பெட்ரோல், டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்து எரிபொருட்களின் விலை கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு குறைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்