“காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்” எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
“காவிரி விவகாரத்தில் நாளை தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்” என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #Palanisami
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ந் தேதி சேலம் வந்தார். அவர் 12-ந் தேதி ஏற்காடு கோடை விழா- மலர் கண்காட்சியை தொடங்கிவைத்தார். நேற்று முன்தினம் ஏ.வி.ஆர். ரவுண்டானா உயர்மட்ட மேம்பாலத்தை திறந்துவைத்தார். பின்னர் ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த விழாவில் அவர், பங்கேற்றுவிட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் தங்கினார்.
நேற்று காலை அவரது வீட்டில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, குறைகளை கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து திருப்பதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
“காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்து இருக்கிறது. அதில் மத்திய அரசு சில யோசனைகள் அடிப்படையில் கருத்து தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கையின்படி நாளை (புதன்கிழமை) தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டத்தின் மூலமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகியதால் இறுதி தீர்ப்பு வழங்கக்கூடிய நிலை வந்துள்ளது. இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். தமிழக அரசை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது”.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம்
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் வரைவு திட்டத்தில் உரிய செயல்பாடு இருக்கிறதா என்பதை உச்சநீதிமன்றம் பரிசீலித்து நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். வரைவு செயல்திட்டத்தில் உள்ள உட்கருவை படித்து பார்த்துவிட்டு எங்களுடைய பதிலை தெரிவிப்போம். உச்சநீதிமன்றத்தில் முறையாக சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.
வரைவு திட்டத்தில் தமிழகத்திற்கு ஏதாவது பாதகமாக இருந்தால் அதை தமிழக அரசு ஜீவாதார உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்காத வகையில் முறையிடுவோம். உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் காவிரியில் உள்ள உரிமையை தமிழகத்திற்கு பெற்று தருவோம்.
காவிரி பொதுமக்களின் தலையாய பிரச்சினை, ஜீவாதார உரிமை அவற்றை பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் விவசாயிகளுடன் கூட்டம் நடத்துவது குறித்து குறை சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.