இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக 1,511 ஏரிகள் தேர்வு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2018-05-13 23:30 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் மணிமண்டபம் திறப்பு விழா, வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட ஆண்டு விழா ஆகிய விழாக்கள் பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்டு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1899-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. என்னை உருவாக்கி உங்கள் முன் நிறுத்தியிருப்பது இந்த பள்ளி தான். நான் படித்த பள்ளி இது. 1967-ம் ஆண்டு முதல் 6-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு அதாவது எஸ்.எஸ்.எல்.சி. வரை இங்கு படித்தேன்.

சிறந்த ஆசிரியர்கள் பெருமக்கள் எங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தனர். அதையெல்லாம் நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் படித்து முதல்-அமைச்சராக உருவாகி இருக்கிறேன் என்றால் அந்த பெருமை இந்த பள்ளிக்கூடத்தை சாரும்.

குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 65 சதவீதம் மக்கள் விவசாயப்பணி செய்கிறார்கள். உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் விவசாயத்துக்கு நீர் முக்கியம். இந்த நீர் இருந்தால்தான் விவசாயிகளும், வேளாண்மையும் நன்றாக இருக்கும். எனவே கடந்த ஆண்டு 1,519 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் சீரமைக்கப்பட்டது.

இந்த ஆண்டில் 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏரிகளில் நீர் வரத்து கால்வாய், கரைகள் பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், ஆழப்படுத்துதல், உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி சரிசெய்தல் ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் அந்தந்த பகுதி விவசாய சங்கங்களுக்கு வழங்கப்படும். சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி குடிமராமத்து பணிக்கு செலவாகும் தொகை முழுவதும் அரசு அவர்களுக்கு வழங்கும். இதனால் எந்த தவறும் நடந்து விடாமல் பணிகள் நடைபெறும்.

இந்த பணிகள் நிறைவடைந்தால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம், ஏரிகளில் தேங்கி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படும். இதுபோல் மழைக்காலங்களில் மட்டும் நீர் ஓடும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க 3 ஆண்டுகளுக்கான திட்டம் போடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டுக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் படித்த பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு சில கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் கேட்டு கொண்டு உள்ளனர். அந்த கோரிக்கைகள் இந்த அரசு நிறைவேற்றி தரும். இங்கு ஆயிரம் மாணவர்கள் அமரும் வகையில் புதிய கலையரங்கம், பள்ளிக்கூட சிறப்பு பராமரிப்பு நிதி, சுற்றுச்சுவர் ஆகியவற்றுக்கு ரூ.1 கோடி தேவை என்று தெரிவித்தனர். அந்த தொகையை முழுமையாக தமிழக அரசு வழங்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்