குழந்தைகள் கடத்தப்பட்டால் மாயம் என்று வழக்குப்பதிவு செய்யக் கூடாது ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று டி.ஜி.பி. சுற்றறிக்கை
குழந்தை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
சென்னை,
குழந்தை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தால் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாயமானதாக வழக்குப்பதிவு செய்யக்கூடாது’ என்று கூறினர்.
நீதிபதிகள் வழங்கிய உத்தரவை அரசு வக்கீல் ஆர்.ரவிச்சந்திரன் தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு அலுவல் ரீதியாக தெரிவித்தார். இதையடுத்து டி.கே.ராஜேந்திரன் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர், ‘குழந்தைகள் மாயமானதாக புகார்கள் கொடுக்கும்போது, நேரடியாக கடத்தல் புகார் கொடுக்கப்பட்டாலும் போலீசார் வழக்கமாக காணவில்லை என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். இனிமேல் காணாமல் போன சம்பவங்களின்போது நேரடி கடத்தல் புகார்கள் பெறப்பட்டால் இந்திய தண்டனை சட்டம் 363 அல்லது 366 (ஏ) பிரிவுகளின் கீழ் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று அறிவுறுத்தி உள்ளார்.