தமிழக ஆறுகளில் ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பெரிய ஆறுகளில் ரூ.1,000 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #EdappadiPalanisamy
கோவில்பட்டி,
மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழகத்தில் உள்ள பெரிய ஆறுகளில் ரூ.1,000 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரசபையில் செய்து முடிக்கப்பட்ட 2-வது குடிநீர் குழாய் திட்டம் தொடக்க விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர், ரூ.256 கோடியே 85 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரத்து 636 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
பருவகாலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க ஆறுகளை தூர்வாருவதற்காக குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குளங்கள் தூர்வாரப்பட்டன. இதனால் இந்த ஆண்டு பெய்த மழை குடிமராமத்து பணி செய்த குளங்களில் தேங்கி இருக்கிறது.
இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்திற்காக ரூ.331 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 1,511 ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுகின்றன. குளங்களை தூர்வாரினால் மழைநீர் குளங்களில் தேங்கும். இதன்மூலம் நிலத்தடி நீர் உயரும். விவசாயம் செழிக்கும். ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்படும்.
தமிழகத்தில் மழை காலங்களில் பெய்யும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்க பெரிய ஆறுகளை தேர்வு செய்து தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.359 கோடியில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு இந்த அரசு எப்போதும் பாதுகாவலனாக இருக்கிறது. உளுந்து பயிர் செய்யும் விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்யும். இதுவரை 205 டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதுபோல சொட்டுநீர் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வேளாண்மை கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடம் வகிக்கிறது. அதே போல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விலையில்லா ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சருக்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வீரவாள் பரிசு வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தனர். பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.