காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது
காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மீண்டும் ஒரு கொள்ளை முயற்சிக்காக வந்தபோது ரெயில்வே போலீசாரிடம் சிக்கினர்.
சென்னை பாரிமுனை மண்ணடியை சேர்ந்தவர் இம்தியாஸ் அகமது (வயது 48). தொழில் அதிபர். இவர் கடந்த மார்ச் 10-ந்தேதி காரைக்கால் எக்ஸ்பிரசில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தான் பையில் பத்திரமாக கொண்டு சென்ற ரூ.5 லட்சம் பணத்தை தொலைத்தார். உடனடியாக தனது பணப்பையை மீட்டு கொடுக்கவேண்டும் என்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் எழும்பூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் ரோஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். எழும்பூர் ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 3 நபர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு பையுடன் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அவர்கள் வைத்திருந்தது தனது பணப்பை தான் என்று இம்தியாஸ் அகமதுவும் உறுதிபடுத்தினார். இதையடுத்து அந்த நபர்களை தேடும் வேட்டை தொடர்ந்தது.
இந்தநிலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நேற்று பிற்பகல் சந்தேகத்துக்கிடமான வகையில் 3 பேர் சுற்றித்திரிவதை கண்காணிப்பு கேமரா மூலம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் ரோஜா பார்த்தார். இம்தியாஸ் அகமதுவிடம் பணத்தை கொள்ளையடித்தவர்கள் போலவே அவர்கள் இருந்ததால், உடனடியாக அவர்கள் 3 பேரும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த செய்யது முகமது பாக்கர் (45), மாதவரத்தை சேர்ந்த அஜீஷ் (31), திருச்சியை சேர்ந்த ராகுல் (29) ஆகியோர் என்பதும், இவர்கள் கூட்டாக சேர்ந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மீண்டும் ஒரு கொள்ளை முயற்சிக்காக எழும்பூர் ரெயில் நிலையம் வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.