பதவி உயர்வு அளிக்கும் வரை இந்திய மருத்துவக்குழு ஆய்வுக்கு ஒத்துழைக்கமாட்டோம் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

பதவி உயர்வு அளிக்கும் வரை இந்திய மருத்துவக் குழுவின் ஆய்வுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2018-05-07 22:15 GMT
சென்னை, 

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்துப் பேசினர். பின்னர் நிருபர்களிடம் டாக்டர் செந்தில் கூறியதாவது:-

பேராசிரியர் பதவிக்கு ‘அசோசியேட்’ பேராசிரியர்கள் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றனர். ஆனால் பதவி உயர்வை வழங்காமலேயே அவர்களை பேராசிரியர்களாக கணக்குகாட்டுகின்றனர். பதவி உயர்வு வழங்கிய பிறகுதான் அவர்களை பேராசிரியராக பட்டியலிட வேண்டும்.

இல்லாவிட்டால், மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்களின் பணியிடங்களை பற்றி இந்திய மருத்துவக் குழுவில் இருந்து ஆய்வு மேற்கொள்வதற்கு வரும்போது, நாங்கள் ஒத்துழைக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளோம்.

தற்போது பல பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆய்வின்போது நாங்கள் எங்கள் பணியை புறக்கணித்தால், பேராசிரியர் மற்றும் அசோசியேட் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடம் குறைவாகக் காணப்பட்டு, இந்திய மருத்துவக் குழு விதியின்படி கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதமே இதை வலியுறுத்தி இருந்தோம். ஆனால், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அரசு அளித்த உறுதியையும் ஏற்றுக்கொண்டு ஒத்துழையாமை போராட்டம் தொடர்பாக அப்போது எடுத்திருந்த தீர்மானத்தை விலக்கிக்கொண்டோம்.

ஆனால் இப்போது காலதாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது. எனவே வேறு வழியில்லாமல் வருத்தத்துடன் இந்த போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். 500 பேராசிரியர் பதவி இடம் நிரப்பப்படவில்லை. அசோசியேட் பேராசிரியராக இருந்தவர்கள் 200 பேர் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். பேராசிரியராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றிருந்தால் சம்பளம், பதவி, ஓய்வுகால பலன் போன்றவை கூடுதலாக கிடைத்திருக்கும்.

சென்னை அரசு கஸ்தூரிபா மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக மொட்டை கடிதம் வந்திருந்தது. அது உண்மையா என்பதை அந்த மாணவிகள் 48 பேரிடமும் கேட்டுவிட்டோம். அது உண்மையில்லை என்றும், அப்படி அவர்கள் யாரும் புகார் செய்யவில்லை என்றும் கூறிவிட்டனர்.

எனவே மொட்டை கடிதம் போட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மற்றும் செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்துள்ளார்.

நீட் சட்டத்தில் கிராமப்புற ஆஸ்பத்திரிகளையும் சேர்த்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. அங்கு பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கும் ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அதை பரிசீலிப்பதாக அமைச்சர் மற்றும் முதன்மைச் செயலாளர் கூறினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்