நீட் தேர்வெழுத மகனை கேரளா அழைத்துச்சென்ற தந்தை மரணம்: தேவையான உதவிகளைச்செய்ய முதல் அமைச்சர் உத்தரவு

மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை செயலருக்கு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #NEET #NEETExam

Update: 2018-05-06 07:13 GMT
சென்னை, 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 

இதன்படி, கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் எர்ணாகுளம் சென்றார். இன்று காலை 10 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியதால், கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுத மையத்திற்கு சென்றார். மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது திருத்துறைப்பூண்டி விளக்குடியைச்சேர்ந்த  கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதினார். 

உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளத்தில் உள்ள சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வர  தேவையான ஏற்பாடுகளை செய்ய தலைமைச்செயலாளருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்