திருச்சியில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
திருச்சி,
காரைக்குடியில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 4.45 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் காலை 6.25 மணிக்கு திருச்சி கிராப்பட்டியை அடுத்த ஜங்ஷன் மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென ரெயில் என்ஜின் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். கீழே இறங்கி பார்த்தபோது, என்ஜினின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது தெரியவந்தது. ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை நெருங்கியதால் ரெயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாக மெதுவாக இயக்கிய போது, என்ஜின் தடம் புரண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
ரெயில்கள் தாமதம்
அதன் பேரில் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்துக்கு பின் மீண்டும் தடம் புரண்ட ரெயில் என்ஜின் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் காலை 9.50 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டு சென்றது.
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட காரணத்தால் வெளியூர்களில் இருந்து திருச்சி வந்த ரெயில்களும், திருச்சியில் இருந்து மற்ற ஊர்களுக்கு சென்ற ரெயில்களும் தாமதமாகின.
இந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை வந்ததும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு மதியம் 1.40 மணிக்கு எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்லும். நேற்று பல்லவன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு சென்றது.