கட்சியில் உள்ள 16 பேரையே கட்டிக்காக்க முடியாத கமல்ஹாசனால் நாட்டை எப்படி காக்க முடியும்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
கட்சியில் உள்ள 16 பேரையே கட்டிக்காக்க முடியாத கமல்ஹாசனால் நாட்டை எப்படி காக்க முடியும்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி விடுத்தார்.;
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் இந்திய தேர்தல் ஆணையத்தில் வாதங்களை எடுத்து வைத்து அதன் அடிப்படையில் அ.தி.மு.க, இரட்டை இலை எங்களுக்கு தான் என தேர்தல் கமிஷன் தீர்ப்பு வழங்கி உள்ளது. இரட்டை இலை தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த பின்னர் மற்றவர்கள் அதுபற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
தமிழகத்தின் காவிரி மற்றும் கச்சத்தீவு போன்ற உரிமைகளை தி.மு.க.வினர் தாரைவார்த்துவிட்டு எங்களை பற்றி குறை கூறுவது ஒத்துக் கொள்ளமுடியாத ஒன்று. ஊழல் பற்றி ஸ்டாலின் பேசுகிறார். உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சி தான். தன் முதுகில் ஊழலை வைத்துக்கொண்டு அடுத்தவரின் முதுகை பார்க்க வேண்டாம்.
கவர்னர் நிர்வாகத்தின் தலைவர் என்ற அடிப்படையில் நிர்வாகத்தின் செயல்பாடுகளை சொல்வதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது, வெளிப்படையாக நடக்கிறது என்று கவர்னர் தந்த நற்சான்றிதழ். அந்த நற்சான்றிதழ் கவர்னர் தந்தார் என்பதற்காக ஸ்டாலின் முடிச்சு போடக்கூடாது.
தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கின்ற காரணத்தில் தான் உணர்வு ரீதியான போராட்டங்கள் நடக்கிறது. அதை நாங்கள் மதிக்கிறோம். போராட்டம் வன்முறை என்ற அளவுகோலை தாண்டக்கூடாது.
தினகரன்-திவாகரன் இடையே உள்ள பிரச்சினை நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று. உறவினர்களுக்குள் இன்று சண்டை போடுவார்கள் நாளைக்கு ஒன்றாகிவிடுவார்கள். இதனால் அதுப்பற்றி நான் கருத்து சொல்லவிரும்பவில்லை.
நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த சில நாட்களில் ஒரு வக்கீல் விலகி விட்டார். அதன் வழியில் நடிகை ஸ்ரீபிரியாவும் விலகப்போவதாக செய்தி வந்து கொண்டு இருக்கிறது. ஆரம்பித்த சில நாட்களிலேயே கட்சியில் உள்ள 16 பேரை கட்டி காக்க முடியாத கமல்ஹாசனால் எப்படி? ஒரு நாட்டை நிர்வகிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.