13 பல்கலைக்கழகங்களில் தரவரிசை கட்டமைப்பு பணி: தமிழக அரசு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

13 பல்கலைக்கழகங்களில் தரவரிசை கட்டமைப்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழக அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Update: 2018-04-24 23:00 GMT
சென்னை, 

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 9 பல்கலைக்கழகங்கள் தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பிற்கு தகுதி பெற்று விண்ணப்பித்தன.

2018-ம் ஆண்டிற்கான தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் அண்ணா, பாரதியார், சென்னை, அழகப்பா, மதுரை காமராஜர், பாரதிதாசன் மற்றும் பெரியார் ஆகிய 7 பல்கலைக்கழகங்கள், முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 100 முதல் 150 வரையிலான தரவரிசையிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 151 முதல் 200 வரையிலான தரவரிசையிலும் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு துறைகள் மற்றும் பிற கல்வி தொடர்பான நிதி முகமைகளிடமிருந்து நிதி மற்றும் சலுகைகள் பெறுவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.

கட்டணமின்றி

‘கல்வி தரவரிசைகளுக்கான இந்திய மையம்’ என்ற தனியார் நிறுவனம், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களில் மதிப்பீடு மற்றும் தரவரிசை குறித்த மாநில பல்கலைக்கழகங்களின் தரவரிசை கட்டமைப்பினை, எவ்வித கட்டணமின்றி, உருவாக்குவதற்கு முன்வந்துள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் துறைகளின் நிறைகள் மற்றும் குறைகள் தெரியவரும். இச்செயல்பாட்டின் மூலம் பல்கலைக்கழகங்கள் அவைகளின் நிறைகளை மேம்படுத்தி குறைகளை களைந்து தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் தனது தரவரிசையை மேம்படுத்திக் கொள்ள இயலும்.

முதல்-அமைச்சர் முன்னிலையில்...

இதன் அடிப்படையில், 13 பல்கலைக்கழகங்களின் மதிப்பீடு மற்றும் தரவரிசை தொடர்பான மாநில பல்கலைக்கழகங்கள் தரவரிசை கட்டமைப்பு பணியை கட்டணமில்லாமல் மேற்கொள்வதற்காக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் சார்பாக அதன் துணைத்தலைவர் (பொறுப்பு) சுனீல் பாலீவாலும், தனியார் நிறுவனத்தின் சார்பாக அதன் துணைத்தலைவர் கார்த்திக் ஸ்ரீதரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்