உலக புத்தக தினத்தையொட்டி கன்னிமாரா நூலகத்தில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தகங்கள் கண்காட்சி

உலக புத்தக தினத்தையொட்டி கன்னிமாரா நூலகத்தில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மற்றும் அபூர்வமான புத்தகங்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

Update: 2018-04-23 23:30 GMT
சென்னை,

ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளான ஏப்ரல் 23-ந் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தக தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் பழமையான மற்றும் அபூர்வமான நூல்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

இந்த கண்காட்சியில் 1548-ம் ஆண்டு கிரேக்க லத்தீன் மொழியில் வெளியான ‘பிளட்டோவின் தத்துவங்கள்’, 1553-ம் ஆண்டின் மருத்துவ புத்தகம், 1608-ம் ஆண்டின் பைபிள், 1698-ம் ஆண்டின் குரான், 1781-ம் ஆண்டு வெளியான ‘ஞான முறைமைகளின் விளக்கம்’, 1822-ம் ஆண்டு தமிழ் இலக்கியம், 1852-ம் ஆண்டு வீரமாமுனிவர் எழுதிய ‘தேம்பாவனி’, 1858-ம் ஆண்டு வெளியான ‘இமயமலையில் உள்ள தாவரங்கள்’, ‘மதுரா’ போன்ற புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

மாணவிகள் பார்த்தனர்

இதுதவிர இங்குள்ள நூல்களிலேயே மிகவும் பெரிய அளவிலான, 85 சென்டி மீட்டர் நீளமும், 60 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட இந்தியா-ஆசியா வரைபடங்கள் மற்றும் ஓவிய நூல் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நூல் லண்டனில் 1861-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுதவிர 2 ஆயிரம் பழமையான நூல்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெற்றோர், பொதுமக்கள் என பலர் நூலகத்துக்கு வந்து பழமையான நூல்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு நூலக குறிப்பு உதவியாளர் புகழானந்த் உள்ளிட்ட நூலக ஊழியர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த கண்காட்சி நாளை (புதன்கிழமை) வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் மீனாட்சிசுந்தரம் செய்து இருந்தார்.

இதுகுறித்து நூலக அதிகாரிகள் கூறியதாவது:-

தகவல் களஞ்சியம்

நூலகங்களில் சென்று படிக்கும்போது நம்முடைய கவனம் முழுவதும் நூலிலேயே இருக்கும். அதேபோல் ஒரே தலைப்பில் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து பல்வேறு தகவல்களை திரட்டி பெரிய தகவல் களஞ்சியத்தை நம்மால் உருவாக்க முடியும்.

ஒவ்வொரு புத்தகங்களிலும் ஒவ்வொருவர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நம்முடைய கனவை நனவாக்க உதவுகின்றனர். புத்தகங்களை நேசித்து, நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, நல்ல எண்ணங்களுடன், பயனுள்ள வாழ்க்கை வாழ உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்த உலகிற்கு நம்மால் நல்லவற்றை அளிக்க முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்