தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைய வேண்டும் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைய வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
ஆலந்தூர்,
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
1989-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து மகாராஷ்டிராவை சேர்ந்த சுபாஷ் மகாஜன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வன்கொடுமை சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் சட்டத்தை தவறாக பயன்படுத்தப்படுவதை சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக்காட்டி உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை மத்திய அரசு பாதுகாத்து வருகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு திட்டங்கள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அவர்களை பாதுகாக்கவே சட்டத்தை கொண்டு மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
கடந்த ஆண்டு 47 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் ஒரு சில வழக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். 99 சதவீத வழக்குகள் உண்மையானவை. ஆனால் 90 சதவீத வழக்குகள் பொய்யானவை என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறியுள்ளது. சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டால் மத்திய அரசு கொண்டு வரும்.
தமிழக அ.தி.மு.க. அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஒரு பிரிவாக உள்ள டி.டி.வி.தினகரனிடம் பேசினேன். பிரிந்து இருக்கும் அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றாக இணைந்து ஜெயலலிதா கொள்கையை ஏற்று செயல்படவேண்டும் என்று கூறினேன்.
2019-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தமிழக மக்களுக்கு நன்மையான திட்டங்களை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.