பெண்களை பற்றி தவறாக எழுதி விட்டு மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
சமூக வலைத்தளங்களில் பெண்களை பற்றி தவறாக எழுதிவிட்டு அதற்கு மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararjan
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகள் மிகுந்த வேதனையை தருகிறது. ஒரு அழிவுக்கும், மற்றவர்களின் மனங்களை புண்படுத்தவும்தான் சமூக வலைத்தளங்கள் அதிகமாக பயன்படுகிறது.
பலதுறைகளில் பெண்கள் பணியாற்றும்போது சமூக வலைத்தளங்களில் பெண்களை சிறுமைப்படுத்துவது வேதனையாக உள்ளது. பத்திரிகையாளர்கள் பற்றி எழுதியது தவறு. பெண்களை பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதுவது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். பெண்களை பற்றி தவறாக எழுதிவிட்டு மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது.
ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் பரவிய பின்பு, அதை அகற்றி விட்டாலும் ஏதாவது ஒரு வகையில் அது பரவிக்கொண்டேதான் இருக்கிறது. இனிமேல் இதுபோன்ற செயல்களில் கட்சியினர் யாரும் ஈடுபடக்கூடாது. யாராக இருந்தாலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்ப்பு தெரிவிப்பதிலும் கண்ணியம் இருக்க வேண்டும். இனிமேல் பெண்கள் பற்றி தவறாக எழுதுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பா.ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரானது அல்ல. பெண்களுக்கு எதிராக வரும் கருத்துக்கு போராடும் முதல் நபராக நான் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.