கோவையில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை மரங்கள் சாய்ந்தன

கோவையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

Update: 2018-04-20 21:30 GMT
கோவை, 

கோவையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. பகலில் அனல் காற்று வீசியது. கடும் வெப்பத்தால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் கோவை மாநகர பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது.

ஆனால் கோவையை ஒட்டியுள்ள சரவணம்பட்டி, கோவில்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம், தொண்டாமுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கணபதி, சரவணம்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சரவணம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் கார் கண்ணாடி உடைந்தன. மேலும் பலத்த காற்றில் கேபிள் வயர்களும் அறுந்து சாலையில் விழுந்தன.

இதே போல் மேலும் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பேரூர் பகுதியில் ஒரு மின்கம்பம் சாய்ந்தது.

கணபதி கணேஷ் லே-அவுட் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டு இருந்த தனியார் செல்போன் கோபுரம் பலத்த காற்றில் 2 துண்டாக உடைந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதம் அடைந்தன.

மேலும் செய்திகள்