டி.டி.வி.தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கை விசாரிக்க தடை ஐகோர்ட்டு உத்தரவு
டி.டி.வி.தினகரன் மீதான 2-வது அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டுக்கு, சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை,
டி.டி.வி.தினகரன் மீதான 2-வது அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டுக்கு, சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ‘பார்க்லே’ வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை ‘டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்’ நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக டி.டி.வி.தினகரன் மீது கடந்த 1996-ம் ஆண்டு அமலாக்கத்துறை அன்னியச் செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்தது.
இதேபோல, ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஓட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட், டெண்டி இன்வெஸ்ட்மெண்ட், பேனியன் ட்ரீ ஆகிய 3 நிறுவனங்கள் சார்பில் பார்க்லே வங்கியில் ரூ.36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது மற்றொரு அன்னிய செலாவணி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பார்க்லே வங்கியில் டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் சார்பில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் தன் மீதான மற்றொரு வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்கக்கோரி டி.டி.வி.தினகரன், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘பார்க்லே வங்கியில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான முதல் வழக்கின் விசாரணை அடிப்படையில் தான் இரண்டாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது. இரு வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
முதல் வழக்கை விசாரிக்க ஏற்கனவே இடைக்காலத் தடை உள்ளபோது, இரண்டாவது வழக்கை தனியாக விசாரிக்கக்கூடாது. ஆகவே இந்த வழக்கு விசாரணைக்கும் தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், ‘இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை வருகிற ஜூன் 9-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதுவரை டி.டி.வி.தின கரன் மீதான மற்றொரு அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு தடை விதிக்கிறன்’ என்று உத்தரவிட்டார்.