பள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #sengottaiyan
சென்னை,
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.
மேலும், சுற்றறிக்கையில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் தொடர்பு கொண்டு பேசும்போது, அவர் கூறியதாவது:-
அரசு ஆணை 2010-ன் படி ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிந்த பிறகு, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக சில தகவல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அந்த அடிப்படையில் தான் இது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பள்ளிகள் மூடுவது தொடர்பாக எந்தவித கருத்தும் பதிவிடப்படவில்லை.
ஒரு பள்ளியை மூடுவது என்பதை அரசு ஆராய்ந்து, ஆலோசனை செய்து அதன் பின்னர் தான் முடிவு செய்யும். எனவே பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.