‘குற்றம் யார் செய்து இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’ அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

கல்லூரி மாணவிகளை தவறான வழியில் நடத்த முயற்சி செய்த விவகாரத்தில் குற்றம் யார் செய்திருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

Update: 2018-04-17 23:48 GMT

சென்னை,

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

கல்லூரி மாணவிகளை தவறான வழியில் அழைத்துச் செல்ல முயற்சி செய்த விவகாரத்தில், குற்றம் யார் செய்தாலும், எவர் செய்தாலும் எந்த உயர் பதவியில் இருப்பவர்கள் செய்திருந்தாலும் குற்றம், குற்றமே. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கின்ற வகையில் தான் தமிழக அரசு முழுமையான அளவில் விசாரணையை முடுக்கி விட்டு இருக்கிறது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் சந்தானம் தலைமையில் ஒருநபர் கமி‌ஷன் அமைத்து உத்தரவிட்டு இருக்கிறார். உயர் கல்வித்துறை சார்பில், போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அதே நேரத்தில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகமும், சிண்டிகேட் உறுப்பினர்களை வைத்து விசாரணை நடத்துகிறார்கள். எனவே 3 நிலைகளில் இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எனவே விசாரணை என்பது முழுமையாக நடைபெற்று உண்மை வெளிவரும். அப்போது, இதில் யார் யார் எல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களோ? அவர்கள் எல்லோரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

சி.பி.ஐ. விசாரணை நடத்துவது குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. அவருடைய ஆட்சி காலத்தில், 2008–ம் ஆண்டு, அறிவாலயத்துக்கு கூட்டத்துக்கு சென்ற கே.கே.நகர் மகளிர் அணி செயலாளர் பால்மலர் வீட்டுக்கு திரும்பி போகவில்லை. அன்று மணிமங்கலம் ஏரியில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்குமூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அது கொலையாக கருதப்பட்டது.

தி.மு.க.வை சேர்ந்த மகளிர் அணி செயலாளர், அந்த கட்சியின் ஆட்சி காலத்திலேயே கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்ட போது, மு.க.ஸ்டாலினின் தந்தை தான் முதல்–அமைச்சர். தி.மு.க. அரசாங்கம் தான் நடைபெற்றது. அன்று சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டதா?

தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை சென்டிரல் சிறைச்சாலையில் ஜெயிலர் ஜெயக்குமார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது சிறைச்சாலையே எரிந்து போனது. நிறைய கைதிகள் இறந்து போனார்கள். இதற்கெல்லாம் சி.பி.ஐ. விசாரணை அன்று கேட்கப்பட்டபோது, மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை வைக்கவில்லையே. இதுபோன்று எத்தனையோ நிகழ்வுகள் சொல்லலாம்.

ஆட்சியில் இருக்கும் போது ஒன்று, இல்லாத போது ஒன்று என்று பேசக்கூடாது.

வேந்தர் அமைத்துள்ள விசாரணை கமி‌ஷனும், அரசு சார்பில் போலீஸ் விசாரணையும் போய்க்கொண்டு இருக்கும் போது, ஆரம்ப நிலையிலேயே அதற்கு உள்அர்த்தம் பார்க்கக் கூடாது. ‘வேலியே பயிரை மேய்வது’ போல் இந்த செயல் அமைந்து இருப்பதால் இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயல். எனவே இதை ஆரம்ப நிலையிலேயே ஒழிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்