சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை 48 மணி நேரத்துக்குள் செய்து முடிக்கவும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, கோட்டூரை சேர்ந்தவர் எஸ்.முரளிதரன். விலங்குகள் நல ஆர்வலரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் ராஜேஸ்வரி என்ற பெண் யானை, ஒரு காலில் காயம் ஏற்பட்டு, நிற்க முடியாமல் கீழே விழுந்தது. தற்போது படுத்த படுக்கையாக இருக்கும் அந்த யானையின் உடலிலும் புண் ஏற்பட்டுள்ளது. இந்த யானையை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூக்கி நிறுத்த அதிகாரிகள் முயற்சித்தபோது அது கீழே விழுந்ததில், தந்தம், கால் ஆகியவை முறிந்து மேலும் காயமடைந்துள்ளது. தற்போது, அந்த யானை கடுமையான வலிகளுடன், உயிருக்கு போராடிய நிலையில் உள்ளது. பலவிதமான சிகிச்சைகளை அளித்தும், எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த யானையை கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் எம்.மகாராஜா, ‘கோவில் யானைக்கு 24 மணிநேரமும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை’ என்றார். மனுதாரர் சார்பில் வக்கீல் சொக்கலிங்கம் ஆஜராகி வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கால்நடை மருத்துவர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ராஜேஸ்வரி யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடுமையான வேதனையில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அந்த யானையினால் அசைய முடியவில்லை. அதற்கு சிகிச்சை அளித்தும், முன்னேற்றம் எதுவும் இல்லை.
எனவே, சேலம் கால்நடை மருத்துவர், அந்த யானையை பரிசோதிக்க வேண்டும். அப்போது, அந்த யானை உயிரோடு இருப்பதால், கடுமையான வலியினால் துன்பப்படும் என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் அளித்த பின்னர், சட்டவிதிகளை பின்பற்றி, அந்த யானையை கருணை கொலை செய்யலாம். இந்த நடவடிக்கைகள் எல்லாம் 48 மணி நேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.