மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தலைவர் தகவல்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவுதமா கூறினார்.
சென்னை,
சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்றுவரும் ராணுவ கண்காட்சியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் முப்பரிமாண (3டி) கண்காணிப்பு ரேடார் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் இயக்குனரும், மேலாண்மை இயக்குனருமான எம்.வி.கவுதமா இதனை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமெரிக்காவுடன் இணைந்து முப்பரிமாண கண்காணிப்பு ரேடார் தயாரித்துள்ளது. இக்கருவி குறைந்த மின்சாரத்தில் இயங்கக்கூடியது. அத்துடன் குறைந்த அளவு எடை கொண்டது. 400 கி.மீட்டர் தூரம் வரையுள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாகக் கண்காணித்து தகவல் அளிக்கும் திறமை கொண்டது. தீ விபத்துகள் குறித்து முன்கூட்டியே அறிந்து தகவல் அளிக்கும் திறன்கொண்டது. இந்திய ராணுவத்தில் இந்த ரேடார் கருவி விரைவில் சேர்க்கப்படும்.
வாக்குப்பதிவு எந்திரம்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எம்1, எம்2, எம்3 ரக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்து வருகிறது. இந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவித முறைகேடும் செய்யமுடியாது. காரணம், அந்த எந்திரத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள சாப்ட்வேர் பல்வேறு தணிக்கைகளுக்குப் பிறகே அதில் பொருத்தப்படுகிறது.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் சிறப்பை அறிந்து வெளிநாடுகளும் அவற்றை கொள்முதல் செய்ய முன்வந்துள்ளன. நமீபியா நாட்டுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. நேபாளத்தில் நடந்த பொதுத்தேர்தலில் பயன்படுத்த இந்த எந்திரங்களை கேட்டனர். ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் எங்களால் தயாரித்து வழங்க முடியவில்லை. இலங்கையும் இந்த எந்திரங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
தொழிற்சாலைகள் விரிவாக்கம்
தற்போது மின்னணு சாதனங்கள் 60 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்த மின்னணு சாதனங்கள் உள்நாட்டிலேயே தயாரித்து, வெளிநாட்டு இறக்குமதியை 30 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியில் 85 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்கு வழங்கிவருகிறது. தமிழகத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கவுதமா கூறினார்.
அப்போது பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மூத்த துணை மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) அஷிஷ் கன்சால், துணை பொதுமேலாளர் எச்.ஏ.ஷிரின் சாமுவேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.