காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வைகோ உறவினர் தீக்குளிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடுரோட்டில் வைகோவின் உறவினர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வருபவர் சரவணசுரேஷ் (வயது 50). இவர் அட்டை வணிகம் செய்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சரவணசுரேஷ் வழக்கமாக மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை நடைபயிற்சிக்காக காரில் செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்ற அவர் தமிழ்நாடு ஓட்டல் அருகே சென்றபோது காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
திடீரென தான் கொண்டுவந்த பெட்ரோலை எடுத்து தன் உடல் மீது ஊற்றினார். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும், ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும்’ என்று கோஷமிட்டபடியே உடலில் தீ வைத்துக்கொண்டார். இதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சரவணசுரேசின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுபற்றி அவருடைய உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.
அவருடைய மனைவி அமுதா சம்பவ இடத்துக்கு ஓடிவந்து தீக்காயங்களுடன் இருந்த கணவரை பார்த்து கதறி அழுதார். போலீசார் அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆம்புலன்சில் செல்லும்போதும், சரவணசுரேஷ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியபடியே சென்றார்.
அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சரவணசுரேசுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனால் அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரவணசுரேஷ், வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் ஆவார். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. தொழில் நிமித்தம் விருதுநகரில் வசித்து வருகிறார்.
இவருடைய மகன் ஜெயசூர்யா தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டும், மகள் ஜெயரேணுகா தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்துவந்து சரவணசுரேசை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது வைகோ கண்ணீர் விட்டு கதறி அழுதார். நிருபர்களுக்கும் அழுது கொண்டே பேட்டி அளித்தார். வைகோ நிருபர்களிடம் கூறியதாவது-
சரவண சுரேசுக்கு என் தலைமையில் தான் திருமணம் நடந்தது. அரசியல்ரீதியாக என்னுடன் பணியாற்றியவன். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலின்போது எனது வரவு-செலவு கணக்குகளை கவனித்தவன். குடும்பத்தில் எனக்கு அரசியல்ரீதியாக உதவிய அவன், தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான்.
ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ பிரச்சினையில் போராடிவந்த என்னை சிலர் அவதூறாக பேசிவருவதாக என்னிடம் கூறி வருந்தினான். இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதே என்று சமாதானம் செய்தேன். கடந்த சில நாட்களாக சோகமாக இருந்த அவன் தீக்குளித்துள்ளான். அவன் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
என்னைப்பற்றி ‘மீம்ஸ்’ போடுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் போடும் மீம்ஸ்களால் எங்கள் குடும்பத்தினர் மனரீதியாக நொறுங்கிப்போய் உள்ளனர். எனவே மீம்ஸ் போடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் என் மகனுக்கு பங்கு உள்ளது என சிலர் பரப்பி வருகின்றனர். இது மிகுந்த கவலை அளிக்கிறது.
தொண்டர்கள் மட்டுமே தீக்குளிக்கிறார்கள், தலைவர்களோ, தலைவர்களின் குடும்பத்தினரோ தீக்குளிக்கவில்லை என பலர் கூறிவந்த விமர்சனங்களுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது. யாரும் தீக்குளிக்காதீர், உங்கள் காலில் விழுந்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறை யாரும் செய்யாதீர்கள்.
இவ்வாறு வைகோ கூறினார்.