தன்னாட்சி அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தன்னாட்சி அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் முறைகேடுகளைத் தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், விதிகளை வகுக்கும் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அதாவது, கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவோ, பணம் வைத்திருப்பவர்களுக்கு ஆதரவாகவோ முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்பது தான் தேர்தல் ஆணையம் மறைமுகமாக கூறியிருக்கும் செய்தி ஆகும். கள்ள ஓட்டுப் போடுவது தான் தேர்தல் முறைகேடு என்று கருதக்கூடாது.
நேர்மையான, சுதந்திரமான தேர்தல் என்ற தத்துவத்தை சிதைக்கும் சிறு அசைவு கூட பெரும் முறைகேடு தான். தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்தவர்களுக்கு இது எந்த வகையிலும் அதிர்ச்சியையோ, வியப்பையோ அளிக்காது. ஆனால், தேர்தல் ஆணையம் மிகவும் கண்டிப்பான அமைப்பு; சிறு பிழைகூட இல்லாமல் தேர்தலை நடத்தும் என நம்பியவர்களுக்கு இது பேரிடியாக இருக்கும்.
ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி ஆகும். ஆனால், ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு மாற்றாக பணம் தேர்ந்தெடுக்குமானால் அது ஜனநாயகம் அல்ல, பணநாயகம் ஆகும். தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக 1998-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரைகளை மத்திய அரசு இன்று வரை கிடப்பில்போட்டு வைத்திருப்பதும், அதன்பின் நசீம்ஜைதி காலத்தில் அனுப்பப்பட்ட 47 தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்னும் பரிசீலிக்காததும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயல் அல்ல.
ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுவதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். இதை உணர்ந்து தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்வதுடன், தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஏற்ற தன்னாட்சி அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.