ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தி பணம் கொள்ளையடிக்க முயற்சி 2 பேர் கைது
ஏ.டி.எம். மையத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவியை ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தாம்பரம்,
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 11-ந் தேதி இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் வங்கி ஊழியர்கள் பணம் நிரப்பினார்கள்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டை பொருத்தும் இடம் மற்றும் ரகசிய எண்கள் பதிவு செய்யும் இடங்களில் சில மாற்றம் ஏற்பட்டு இருப்பதுபோல தெரியவந்ததால், சந்தேகம் அடைந்த அவர்கள், இதுபற்றி வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு மற்றும் கேரளா ஏ.டி.எம். பராமரிப்பு மேலாளர் ராஜேஷ்குமார், ஏ.டி.எம். அலுவலர் தங்கவிநாயகம் ஆகியோர் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ஏ.டி.எம். எந்திரத்தை சோதனை செய்தனர்.
‘ஸ்கிம்மர்’ கருவி
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன் மூலம் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்களை திருடி, அதன் மூலம் அவர்களின் பணத்தை கொள்ளையடிக்க திருட முயன்று உள்ளதாக தெரிகிறது.
ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது 2 மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவியை பொருத்திவிட்டு சென்றதை கண்டுபிடித்தனர்.
அந்த கருவியை திரும்ப எடுத்து செல்வதற்கு அவர்கள் இருவரும் வரும்போது கையும் களவுமாக பிடித்து விடலாம் என முடிவு செய்து அந்த ஏ.டி.எம். மையத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
2 பேர் சிக்கினர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். மேலும், அவர்கள்தான் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்ததால் சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள், இருவரையும் ஏ.டி.எம். மையத்தின் உள்ளே வைத்து ஷட்டரை இழுத்து பூட்டினர்.
இதுபற்றி தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
தகவல்களை சேகரிக்க பணம்
அதில் அவர்கள், நெல்லை எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்த சுல்தான் (வயது 51), ரஹமத் நகர் பகுதியை சேர்ந்த சுலைமான் (49) என்பது தெரியவந்தது. இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து சென்னையின் பல பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஏ.டி.எம். எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ கருவிகளை பொருத்தி, அதன்மூலம் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்களை திருடுவார்கள்.
அந்த தகவல்களை அடையாளம் தெரியாத சிலர், குறிப்பிட்ட சில இடங்களுக்கு தங்களை வரவழைத்து பெற்றுச்செல்லுவார்கள். அவர்கள் யார்? என்று எங்களுக்கு முழுமையாக தெரியாது. இந்த கருவியை ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தி தகவல் எடுத்துக்கொடுப்பதற்கு மட்டும் எங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
கைது
இதையடுத்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 2 பேரிடமும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க முடிவு செய்து உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
கடந்த வாரம் சேலையூர், கவுரிவாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து அவர்களது ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்களை அவர்களுக்கே தெரியாமல் திருடி சுமார் ரூ.10 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டதாக அவர்கள் சேலையூர் போலீசில் புகார் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.