சென்னையில் 28 இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் 3 ஆயிரம் பேர் கைது

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-12 23:30 GMT
சென்னை, 

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சி தொடக்க விழாவிலும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழாவிலும் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் உள்பட கட்சிகள் சார்பில் கருப்புகொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை கலைஞர் பொன் விழா வளைவு அருகே கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கு.க.செல்வம், அண்ணாநகர் மோகன், பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., இலக்கிய அணி புரவலர் இந்திர குமாரி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, அவருடைய மகனும், நடிகருமான அருள்நிதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கனிமொழி எம்.பி. கருப்புச்சேலை அணிந்து வந்திருந்தார். நிர்வாகிகளும், தொண்டர்களும் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர். அனைவரும் கையில் கருப்புகொடி ஏந்தியபடி பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் கருப்புகொடியுடன் சாலைமறியல் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து கனிமொழி எம்.பி. உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதே இடத்தில் திராவிடர் கழகத்தின் சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் கருப்புகொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கனிமொழியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் பிரதமரிடம் அழுத்தம் கொடுத்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?

பதில்:- காவிரி பிரச்சினை குறித்து பேசவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரம் கேட்டும், அவர்களை பிரதமர் மதிக்கவில்லை. ஆனால் சென்னை வந்த பிரதமரை வரவேற்க முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் பச்சை சால்வைகளுடன் காத்திருக்கின்றனர். தமிழர் உணர்வுகளை மதிக்காமல் துரோகம் செய்து வரும் மத்திய அரசுக்கு இவர்கள் சிவப்பு அல்ல, பச்சை கம்பளம் விரித்திருக்கிறார்கள். இது தமிழக அரசின் கோழைத்தனத்தை வெளிப்படையாக காட்டுகிறது.

கேள்வி:- சென்னையில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளாரே?

பதில்:- அப்படி என்றால், போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட போலீசாரின் செயலை ரஜினிகாந்த் நியாயப்படுத்துகிறாரா?

கேள்வி:- கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட டைரக்டர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதே?

பதில்:- காவிரி பிரச்சினைக்காக ஒரு பக்கம் போராட்டம் நடத்துவதையும், மறுபுறம் போராட்டம் நடத்துவோர் மீது அடக்குமுறைகளை கையாளுவதையும் தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. இதன்மூலம் தமிழக அரசு காவிரி பிரச்சினையில் இரட்டை வேடம் போடுவது தெளிவாக தெரிகிறது.

மேற்கண்டவாறு கனிமொழி எம்.பி. பதில் அளித்தார்.

ம.தி.மு.க. சார்பில் சின்னமலை மாநகராட்சி பூங்கா அருகே கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கழக குமார், ஜீவன், சுப்பிரமணியன், பகுதி செயலாளர் தென்றல் நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கருப்புகொடி ஆர்ப்பாட்டத்தின்போது வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் வன்முறையாளர் அல்ல. ஆனால் எச்சரிக்கை விடுக்கிறோம். தமிழகம் கொந்தளித்து கொண்டிருக்கிறது. நாங்கள் அறவழியில் போராடுகிறோம். கருப்பு கொடி மட்டுமே கையில் ஏந்தியுள்ளோம்.

தமிழகத்தை வஞ்சிக்க நினைத்து நடமாடும் பிரதமர் மோடி, தமிழகத்தில் கால் வைத்து சென்றது மன்னிக்க முடியாத பச்சை துரோகம். இனி என்ன செய்தாலும், எப்பாடு பட்டாலும், முட்டி மோதினாலும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது.

மோடி அரசு போல ஒரு நாசகார அரசு இந்தியாவில் அமைந்தது இல்லை. தமிழக வீழ்ச்சியை எதிர்நோக்கி இருக்கும் துரோகி. தமிழகம் ஒருபோதும் பிரதமர் நரேந்திர மோடியை மன்னிக்காது. இன்றைக்கு மோடி தமிழகம் வந்து பாதுகாப்பாக சென்றிருக்கலாம். ஆனால் தமிழகத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீ என்றும் அணையாது. தமிழக அரசுக்கு எதிராக மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த தீ மிகப்பெரிய நெருப்பாக மாறி பற்றி எரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமை கட்சி சார்பில், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலை அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.

எம்.எல்.ஏ.க்கள் பூங்கோதை, ஆலடி அருணா, ரவிச்சந்திரன், தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார், மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி., டி.கே.ரெங்கராஜன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை, மத்திய சென்னை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கருப்புச்சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற கருப்புகொடி ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை தாங்கினார். சாலைமறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் பரங்கிமலை ஜோதி திரையரங்கம் அருகே கருப்பு சட்டை அணிந்தபடி திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, நெல்லிக்குப்பம் புகழேந்தி உள்பட 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் தலைமையில் அடையாறு காந்திநகரில் உள்ள காங்கிரஸ் மாவட்ட அலுவலகம் அருகே கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி, சாலைமறியல் என 28 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் 350 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 100 பேர் கைது செய்யப்பட்டனர். 3 ஆயிரம் பேர் அமைதியாக கலைந்துசென்றுவிட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து புறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேற்கண்ட தகவலை போலீசார் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டின் நுழைவுவாயில் மற்றும் மாடியில் கருப்பு கொடி பறந்தது. கருணாநிதியும் கருப்பு சட்டை அணிந்திருந்தார். அவரது பேரனும், நடிகருமான உதயநிதி கருப்பு சட்டை-பேண்ட் அணிந்தபடி சந்தித்து பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு, சி.ஐ.டி. நகரில் உள்ள மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. வீடு, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டனில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோரது வீடுகளிலும் கருப்புகொடி பறந்தது. நீலாங்கரையில் உள்ள திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் தனது வீட்டில் கருப்புகொடி கட்டி இருந்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகம், மண்ணடியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம், அசோக்நகரில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகம், ராயபுரத்தில் உள்ள சமத்துவ மக்கள் கழகம் அலுவலகம் உள்பட இடங்களிலும் கருப்புகொடி கட்டப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்