காவிரி மேலாண்மை வாரியம் : கர்நாடக தேர்தலுக்காக தாமதிப்பது ஆபத்தானது, அவமானகரமானது -கமல்ஹாசன்

கர்நாடக தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக பாமர மக்களும் நம்பத்தொடங்கியது ஆபத்தானது, என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2018-04-12 22:15 GMT
சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து 1 நிமிடம் 31 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கருப்பு சட்டை அணிந்தபடி அந்த வீடியோவில் கமல்ஹாசன் பேசியிருப்பதாவது:-

ஐயா வணக்கம், என் பெயர் கமல்ஹாசன். நான் உங்கள் குடிமகன். இது என் மாண்புமிகு பிரதமருக்கு, நான் அனுப்பி தரும் ஒரு திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை, நீங்கள் அறியாதது அல்ல. தமிழக மக்கள் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது.

செயல்படுத்தவேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும், பண்டிதர்களும் இந்த கால தாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அது ஆபத்தானது. அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழர்களுக்கும், கர்நாடகர்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆகவேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்தவேண்டியது என் உரிமை. இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடிதம் வடிவிலும் உங்களுக்கு (பிரதமர்) அனுப்பி வைக்கிறேன்.

தயவு செய்து செயல்படுங்கள். இந்த நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா, நீங்களும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடிக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

அக்கறையுள்ள தமிழனாகவும், இந்தியக் குடிமகனாகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியின் விளைவாகத், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைத் தாங்கள் அறிவீர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறியதை எதிர்த்து, நீதி கேட்டு நடக்கும் போராட்டமே இது. தீர்ப்பைச் சொல்லியதன் மூலம் தனது அரசியல் சாசனப் பங்கினை சுப்ரீம் கோர்ட்டு நிறைவேற்றிவிட்டது. இப்போது, அந்தத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் அரசியல் சாசனக் கடமை.

இதற்கு முன்பு குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக, நர்மதா நதியின் நீரை 4 மாநிலங்களுக்கு இடையில், வாரியத்தின் மூலம் பகிர்ந்துகொண்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. இப்போது இந்திய நாட்டின் பிரதமராக, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சொல்லிலும், செயலிலும் முழுமையாக நிறைவேற்றத் தேவையான பணிகளைச் செய்ய வேண்டியது உங்கள் கடமை.

தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும், கர்நாடகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் காரணமாகவும், அதில் உங்கள் கட்சிக்கு இருக்கும் ‘அக்கறை’ காரணமாகவும் தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என நம்பத் துவங்கிவிட்டார்கள். இந்த தேசத்தின் பிரதமராக, அப்படி ஒரு தவறு நடைபெறவில்லை என்பதை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதன் மூலம் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை.

தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையை உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் வழியாக பெற வேண்டிய காவிரி நதிநீர்ப் பங்கீட்டை உறுதி செய்வதும் உங்கள் கடமை. உங்கள் உடனடி செயல்பாட்டை உடனே எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்