தமிழர்-கன்னடர் ஒற்றுமையே காவிரி பிரச்சினைக்கு தீர்வு நடிகர் சிம்பு பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர்கள் நடத்திய போராட்டம் பயனற்றது என்று அதில் கலந்துகொள்ளாமல் சிம்பு புறக்கணித்தார்.

Update: 2018-04-12 21:33 GMT
காவிரி பிரச்சினையில் அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு இரு மாநில மக்களும் சமாதானமாக பேசி தீர்க்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

சிம்புவின் கருத்துக்கு கர்நாடகாவில் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து சிம்பு அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனது கருத்தை கன்னடர்கள் வரவேற்று இருப்பது மகிழ்ச்சி. கன்னடர்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோக்களை பார்த்து சந்தோஷப்பட்டேன். நான் கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளேன் என்கின்றனர். நான் கன்னடர் அல்ல. தமிழன். கன்னடர்களை ஆதரிக்கவில்லை. அவர்களின் மனிதாபிமானத்தை ஆதரிக்கிறேன்.

நான் தண்ணீருக்காக கன்னடர்களிடம் கெஞ்சுகிறேன் என்பதும் தவறு. இது இரு மாநில மக்களுக்கும் நல்லது நடப்பதை கெடுக்கும் முயற்சியாகும். நல்லது நடக்கவிடாமல் சிலர் தடுக்கின்றனர். அதையும் தாண்டி பெரும்பான்மை மக்கள் உண்மையை புரிந்துள்ளனர். எனது கருத்துக்களால் எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தமிழர்கள், கன்னடர்கள் மட்டுமின்றி மனிதாபிமானத்தில் நம்பிக்கை உள்ள இந்திய மக்கள் என்னுடன் நிற்பார்கள்.

கன்னட மக்களிடம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற மனமாற்றம் ஏற்பட்டு உள்ளது. இரு மாநில மக்களும் ஒற்றுமையுடன் இருந்து நல்லதை செய்ய வேண்டும். இரு மாநில மக்களுக்கும் சிலர் வெறுப்பு வேற்றுமைகளை உருவாக்கி வைத்துள்ளனர். அதை உடைக்க வேண்டும். இரு மக்களின் ஒற்றுமையே பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும்.

அரசியலுக்கு வருவதற்காக காவிரி பிரச்சினையில் நான் ஈடுபடவில்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன். காவிரி விவகாரத்தில் உள்ள அரசியலை உடைக்கவே முயற்சி செய்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு ஆட்சியோ அதிகாரமோ வேண்டாம். மக்களின் மனதும் அன்பும் போதும். சண்டை போடுவதாலும் போராட்டம் செய்வதாலும் எதுவும் நடக்காது.”

இவ்வாறு சிம்பு கூறினார். 

மேலும் செய்திகள்