பயந்தாங்கொள்ளி பிரதமர் மோடி தைரியம் இருந்தால் சாலையில் வரட்டும் - வைகோ பேச்சுக்கு தமிழிசை கண்டனம்
பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் தொடர்பான வைகோவின் கருத்துக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்து உள்ளார். #TamilisaiSoundararajan #Vaiko
சென்னை,
இந்திய ராணுவம் தங்களுக்கு தேவையான பெரும்பாலான தளவாட பொருட்களை தயாரித்து வருகிறது. அத்துடன் நம் நாட்டில் உள்ள ஒரு சில சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ராணுவத்திற்கு தேவையான தளவாட பொருட்களை தயாரித்து வழங்குகின்றன. அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி சென்னை- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நடக்கிறது. 12-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி முறைப்படி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் காவிரி தொடர்பான பிரச்சினைகள் வலுத்துவரும் நிலையில், பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அரசியல் கட்சிகள் தரப்பில் மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், சென்னை வரவிருக்கும் மோடி துணிவிருந்தால் சாலை வழியாக வரட்டும். டெல்லியிலிருந்து விமானமூலம் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.ஐ.டி வளாகத்துக்குள் நேராக நுழைந்து, மோடிக்காக ஐ.ஐ.டி சுவரை இடித்துக் கட்டப்பட்ட சாலை வழியாக சென்று கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறார். எதற்கு இவ்வளவு பாதுகாப்பு. கறுப்புக்கொடிகளைப் பார்த்து பிரதமர் ஏன் பயப்பட வேண்டும். கொடிகளில் குண்டு வைத்துவிடுவோம் எனப் பயப்படுகிறாரா. இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியான பிரதமரை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால், நீங்கள் சாலை வழியாக வாருங்கள் என்று ஆவேசமாக பேசினார்.
தமிழிசை கண்டனம்
பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் தொடர்பான வைகோவின் கருத்துக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதை கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், இதை சொல்லும் திரு. வைகோ யாருக்கு பயந்து கள்ளதோணியில் இலங்கை சென்றார்? பிரதமர் முன்அறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாகிஸ்தானுக்கே தைரியமாக சென்றவர் என குறிப்பிட்டு உள்ளார்.