அ.தி.மு.க.வின் போராட்டத்தினால் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார்; அமைச்சர் கடம்பூர் ராஜூ
அ.தி.மு.க.வின் போராட்டத்தினால் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கிறார். #AIADMK
சென்னை,
நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வை எதிர்க்கட்சிகள் முற்றிலும் முடக்கின. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன.
இதனால் மக்களவை, மாநிலங்களவை பெரும்பாலும் ஒத்திவைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எந்த விதமான பணிகளும் நடைபெறாமல் முடிவடைந்த நிலையில், நாடாளுமன்றம் முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
நாடாளுமன்ற முடக்கத்திற்கு காரணமான காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மோடி - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வினரின் போராட்டத்தினால் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நாங்கள் நடத்திய போராட்டத்தினால் அவை முடங்கியது. அதனால் பிரதமர் நரேந்திர மோடி நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார் என கூறியுள்ளார்.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவையில் அமளியில் ஈடுபட்டு கோஷங்களையும் எழுப்பினர்.