தென்னிந்திய நிதி மந்திரிகள் மாநாட்டில் தமிழகம் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய மாநாட்டில் தமிழகம் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என திருமாவளவன் கூறியிருப்பது அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு. முதல்-அமைச்சர் சட்ட நிபுணர்களை வரவழைத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி சட்ட போராட்டம் நடத்தினாரோ? அதே வழியிலே, நாம் சட்ட போராட்ட வாதங்களை உரிய வகையில் எடுத்து வைத்து, அதன் மூலம் நமது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று, சுமார் 1 மணி நேரம் அந்த கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அந்த கருத்துகள் அங்கே வலியுறுத்தப்பட்டது, அழுத்தம் கொடுக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு கூட இப்போது கொடுத்துள்ள அந்த கருத்தில், தீர்ப்பாயம் கொடுத்த அந்த தீர்ப்பு தான், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறது. எனவே, இதில் எந்தவித அளவிலும் மாறுதல் செய்யக்கூடாது. இந்த தீர்ப்பை முழுமையான அளவு செயல்படுத்த வேண்டும் என்று தான் நேற்று (நேற்று முன்தினம்) அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனவே நமது உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும்.
பிரதமர் தமிழகம் வரும் போது பச்சை கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து என்றாலும், நமது இந்தியா விவசாயிகளை அடிப்படையாக கொண்ட நாடு என்பதை குறிக்கும் வகையில் தேசிய கொடியில் உள்ள பச்சை நிறத்தை மனதில் வைத்து தான் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் உரிமையை, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதிபடுத்தும் வகையில், பிரதமர் மத்திய அரசின் மூலம் நடவடிக்கை எடுப்பதன் மூலம் தான் நாம் எப்போதும் போல பச்சையாக இருக்க முடியும் என்பதற்காக தான் பச்சை கொடி காட்டுவதாக சொன்னது.
நம்மை பொறுத்தவரை 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படிதான் நிதி பங்கீடு இருக்க வேண்டும், 2011-ம் ஆண்டு கணக்குப்படி இருக்க கூடாது என்பதற்காகத்தான் கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய நிதி மந்திரிகள் மாநாட்டில் தமிழகம் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.