ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் -அ. குமரெட்டியாபுரம் பொதுமக்கள்
ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என அ.குமரெட்டியாபுரம் மக்கள் அறிவித்து உள்ளனர். #SterliteProtest
சென்னை
தூத்துக்குடியில் மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டனர்.
இதற்கான பணிகள் நடந்து வந்தது. இதற்கு தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீர் மாசுப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மொத்தம் 12 இடங்களில் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளார்கள்.அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்து வரும் தொடர் போராட்டம் இன்று 58-வது நாளை எட்டியது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் உருக்காலை அலகு 1-ஐ தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
வேதாந்தம் குழுமம் அளித்த விண்ணப்பம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31க்கு பிறகு தொடர்ந்து நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவிற்கு, அ. குமரெட்டியாபுரம் மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்து உள்ளனர்.