காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. #CauveryIssue #CauveryManagementBoard
நெய்வேலி,
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
நிலையில் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து மின்சாரம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல்மின் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, வடலூர், சிதம்பரம், புவனகிரி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கார் மற்றும் வேன்களில் வந்து குவிந்தனர்.
இன்று மதியம் அவர்கள் என்.எல்.சி. ஆஸ்பத்திரி அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். இதில் விவசாய அமைப்பினர், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பிய வந்தனர்.
இந்த பேரணி செவ்வாய்ச்சந்தை, புதுக்குப்பம் ரவுண்டானா, நெய்வேலி அனல்மின் நிலையம் முன்பு உள்ள ஸ்க்யூ பாலத்தை சென்றடைந்தது.அங்கு வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் முற்றுகை போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ் நிலை நிலவியது.