கார்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்: கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் இறந்தனர்.
வத்தலக்குண்டு,
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் அப்துல்ரசித் (வயது 48). இவர், தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி ரெஜினாபேகம் (35). இவர்களுடைய மகள் நமியா (14), மகன்கள் பாஸ்டின் (10), ஆசின் (9), பாசில் (8). அப்துல்ரசித் தனது குடும்பத்துடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார்.
பின்னர் நேற்று காலை அவர்கள் ஊருக்கு திரும்பினர். அவர்களது கார் பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் கட்டகாமன்பட்டி அருகே ஒரு வளைவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ்சும், காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. அதேபோல் பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. பஸ் மோதிய வேகத்தில் கார் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அப்துல்ரசித், ரெஜினாபேகம், பாஸ்டின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
நமியா, ஆசின், பாசில் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து காயம் அடைந்த நமியா உள்பட 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நமியா பரிதாபமாக இறந்தாள். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இதையடுத்து ஆசினும், பாசிலும் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.